புத்தகங்களுடனான எனது அறிமுகம் என் அப்பாவிடமிருந்து எனக்கு ஆரம்பித்தது. அவரின் ஓய்வு நேரங்களில் அவர் கையில் புத்தகம் இல்லாமல் நீங்கள் அவரை பார்த்திருக்கமுடியாது. புத்தகம் படிக்கும் போது அவரின் மேனரிசமும், முடித்தவுடன் பக்கங்களை மூலையில் மடிக்கும் விதமும் மறக்கமுடியாதவை. இன்றும் அவர் மடித்து வைத்த சில பக்கங்கள் எங்கள் வீட்டில் கிடைக்கின்றன.
என் அப்பா ஊரிலிருந்து, கரெண்ட் போகும் ஒவ்வொரு இரவும் எனக்கும், என் அண்ணனுக்கும், எங்கள் தெரு பையன்களுக்கும் ஏன் பல சமயம் பெரியவர்களுக்கும் கொண்டாட்டமான இரவாகும் - என் அப்பாவிடம் கதை கேக்கலாம். அவரை போன்ற ஒரு சிறந்த கதை சொல்லியை இதுவரை நான் சந்தித்ததில்லை. அவரது கதைக்களன் பரந்துபட்டது மகாபாரதத்தில் ஆரம்பித்து ஆங்கில நாவல்கள், சொந்த அனுபவங்கள் வரை அகண்டு விரிந்தது. என் அப்பாவின் பாணி சற்றேறக்குறைய தென்கச்சி.கோ.சுவாமிநாதனை ஒத்திருக்கும் - ஆனால் பல சமயம் ஒரு மென் புன்னகை தவழ்ந்து கொண்டிருக்கும். ஒரு ஆங்கில நாவலை இரண்டு மணிநேரம், இரண்டு மணிநேரமாக மூன்று நாள்கள் வரை கூட கூறியது உண்டு.
அவர் படித்த புத்தகங்களின் கதை சுருக்கமாவது கேட்டு கொள்வேன். நான் படிக்க தேர்தெடுக்கும் புத்தகங்களில் என் அப்பா கதை சொல்லிய புத்தகங்களுக்கு எப்பொழுதும் முன்னுரிமை உண்டு. அப்படி அவர் கூறிய மிக சுவாரசியமான கதைகளில் ஒன்றை பிற்காலத்தில் படித்த போது மிகப்பெரிய ஆச்சர்யத்தை அடைந்தேன். எப்படி இப்படி ஒரு adults க்கான கதையை இவ்வளவு clean ஆக கதையை சிதைக்காமல் பத்து வயசு பையன்களுக்கு சொல்ல முடிந்தது என்று. அந்த நாவல் Sidney Sheldon 's "Bloodline".
PS :18 வயசில் அதை படித்ததற்காக அவரிடமே திட்டும் வாங்கினேன்.